×

ஏற்காட்டில் தொடர்மழையால் ஓடையில் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்த நீரில் மூழ்கி 2 மூதாட்டி பலி: ஏராளமான வாகனங்களும் மூழ்கியது

சேலம்: ஏற்காட்டில்  பெய்த தொடர்மழையால் சேலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில்,  2 மூதாட்டிகள் நீரில் மூழ்கி பலியாகினர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், அங்கிருந்து  அடிவாரப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் ஓடைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவும் ஏற்காட்டில் உள்ள மலைக்கிராமங்களில், நல்ல மழை பெய்தது. இதனால், நேற்று அதிகாலை ஏற்காடு அடிவாரத்தில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக பள்ளப்பட்டி ஏரிக்கு செல்லும் ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், தோப்புக்காடு, அய்யனார் தோட்டம், சாமிநாதபுரம், அரிசிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஓடையை ஒட்டியுள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. டூவீலர் மற்றும் கார்கள் நீரில்  மூழ்கியது.  கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் ருக்மணியம்மாள் (75) என்ற மூதாட்டி வசித்து வந்தார். கணவர் ஜெயராமன் இறந்து விட்டார். 3 மகன், ஒரு மகள் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கணவரின் ஓய்வூதியத்தை பெற்று, ருக்மணியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சுமார் 4 அடி உயரம் வரை வந்த தண்ணீரால், ருக்மணியம்மாள் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதேபோல், சாமிநாதபுரம் டாக்டர் ரத்தினம் தெருவில் பழனியம்மாள் (80) ஓட்டு வீட்டில் தனியாக இருந்தார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், வெளியே வரமுடியாமல் உயிரிழந்தார். தகவலின் பேரில், செவ்வாய்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள், சென்று சடலங்களை மீட்டனர். மேட்டூர் அணைக்கு 1,40,000 கனஅடி நீர்: சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அளித்த பேட்டி: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து 80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால், விநாடிக்கு 1,40,000 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி வட்டங்களில் உள்ள காவிரிக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

*ஏற்காடு மலைப்பாதையில் 15 இடங்களில் நிலச்சரிவு
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அந்த சாலை முழுவதும்  20 அடிக்கு மேல், பாறை கற்களும், சேறும், சகதியுமாக கிடந்தன. இதேபோல், 13வது கிலோ மீட்டரில் இருந்து 23வது கிலோ மீட்டர் முனியப்பன் கோயில் வரை 15க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டது. மேலும், 5க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. நேற்றிரவு ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த 2 கார்கள் மலைப்பாதையில் சிக்கியது. வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சென்று அங்கு சிக்கியிருந்தவர்களை மீட்டதுடன், அவ்வழியாக போக்குவரத்திற்கு தடை விதித்தனர். மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் டூவீலரில் சென்று ஆய்வு செய்தார். தொழிலாளர்களுடன் இணைந்து சாலையில் முறிந்துகிடந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

Tags : Yercaud , Incessant rains in Yercaud, 2 old women drowned in stream, many vehicles drowned
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து