×

பூந்தமல்லி நீதிமன்ற கழிவறையில் கஞ்சா; போலீசார் தீவிர விசாரணை

பூந்தமல்லி: பூந்தமல்லி நீதிமன்ற கழிவறையில் 50 கிராம் கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. இது கைதிகளுக்காக பதுக்கப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருபவர் ராமமூர்த்தி. இவர், புழல் சிறையில் உள்ள கைதிகள் சிலரை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று அழைத்துவந்தார். பின்னர், அவர்களை நீதிமன்ற வளாகத்தில் நிற்கவைத்துவிட்டு அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கழிவறை ஜன்னலுக்கு மேல் கருப்பு நிற கவர் ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி அங்கு வந்த போலீசார் 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாரண்டுக்காக நீதிமன்றத்திற்கு வரும் கைதிகளுக்கு ரகசியமாக கொடுக்க கழிவறையில் கஞ்சா பதுக்கப்பட்டதா? கஞ்சா வைத்த நபர் யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  ஏற்கனவே பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கைதிக்கு கஞ்சா கொடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Ganja ,Poontamalli , Ganja in Poontamalli court toilet; Police are actively investigating
× RELATED பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா: இளைஞர் கைது