கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை பஸ் கண்டக்டர்களுக்கு டிக்கெட் வசூல் இலக்கு நிர்ணயம்: போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை: மாநகர பேருந்துகளில் 6 கோடியே 60 லட்சம் ரூபாயை பயணிகள் மூலம் வசூலிக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதால், நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில், கூடுதல் நிதியை வசூலிக்கும் பொருட்டு பேருந்து ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சென்னையில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஊதிய உயர்வு கோரி தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சில  தினங்களுக்கு முன்பு 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாநகர போக்குவரத்துக்கு கழகத்திற்கான தேவை மாதத்திற்கு 10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 21,800 ஊழியர்களில் ஒருவருக்கு ரூ.36,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர்களுக்காக மாதந்ேதாறும் ரூ.78 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக 3 கோடியே 40 லட்சம் ரூபாய்  கிடைக்கும் நிலையில் மீதமுள்ள 6 கோடியே 60 லட்சம் ரூபாயை பயணிகளுக்கு  வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும் என ஓட்டுநர்,  நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. .

அந்த தொகையை வசூலிக்கும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என  அனைத்து கிளை மற்றும் மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழக  நிதித்துறை தலைமை அலுவலர் கடிதம் எழுதியுள்ளார். தற்போது சென்னை போருக்குவரத்து கழகத்தில் 3,448 பேருந்துகள் உள்ளன. அவற்றில் 2,600 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சராசரியாக 600 முதல் 800 பேருந்துகள் டெப்போக்களில் தேவையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளையும் சேவையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநகர பேருந்துகளில் நாளொன்றுக்கு சராசரியாக 22 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். எல்லா பேருந்துகளையும் பயன்படுத்தும்போது 27 லட்சம் மக்கள் பயணம் செய்வார்கள். இவற்றின் மூலம் வருமானம் பெருகும். தற்போது சென்னை நகரம் விரிவடைந்துள்ளது. ஆகவே கூடுதலாக 1,000 புதிய பேருந்துகள் தேவை. ஆனால் 242 பேருந்துகள் தான் டெண்டர் விடப்பட்டுள்ளது.

Related Stories: