×

ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் குடியேற தீபா முடிவு: வீடு விற்பனை இல்லை என ஆடியோ வெளியிட்டார்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் குடியேற தீபா முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் வீட்டை விற்பனை செய்ய மாட்டேன் என்று ஆடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதே நேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் வீட்டை சசிகலா மறைமுகமாக வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஜெயலலிதாவின் வீடு யார் கைக்கு போகப் போகிறது என்ற பரபரப்பு இருந்து வந்தது. இந்த பரபரப்புக்கு ஜெ.தீபா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது ஜெயலலிதாவின் வீட்டில் தான் குடியேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணையதளத்தில் ஆடியோ ஒன்றை ஜெ.தீபா வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் தீபா பேசியிருப்பதாவது: போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எங்களின் பூர்வீக சொத்தாகும். எனது பாட்டி சந்தியா மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது. எனது தந்தை ஜெயகுமாரும், தாயார் விஜயலட்சுமியும் அங்கு தான் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

அந்த வீட்டில் தான் நானும் பிறந்தேன். பின்னர் மிகச்சிறிய கருத்து வேறுபாடுகள் காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர். அதன்பிறகு தி.நகரில் உள்ள மற்றொரு பூர்வீக இல்லத்தில் வசித்து வந்தோம். ஜெயலலிதா அழைக்கும் போதெல்லாம் போயஸ் கார்டன் சென்று வருவோம். இந்த பூர்வீக சொத்தை கோர்ட் வழியாக நானும், தீபக்கும் திரும்ப பெற்றுள்ளோம். ஜெயலலிதாவுடன் பயணித்தோம் என்று சொல்லும் சசிகலா குடும்பத்தினர் யாரும் வீட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் விற்பனைக்கு வரும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். வேதா நிலையத்தை பொறுத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நான் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருக்கிறேன். மிக விரைவில் அங்கு குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. எனவே இதுபோன்ற விற்பனை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Deepa ,Boise Garden ,Jayalalithaa , Deepa's decision to settle in Boise Garden house owned by Jayalalithaa: House not for sale released audio
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...