×

திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை: அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் மாற்றுவழியில் செல்வதற்கான பாதை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்ல மாற்றுப்பாதை அமைக்கும் சாத்திய கூறுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல்  ஆணையர்கள் மற்றும்  அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அறநிலையத்துறை சார்பில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை புரியும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடந்து, கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன் நேற்று நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாற்றுப்பாதை அமைத்தல் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

Tags : Tiruthani Murugan Temple ,Minister ,Shekharbabu , Detour to Tiruthani Murugan Temple: Minister Shekharbabu consults with officials
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...