×

போதை பொருள் மையமான குஜராத்: தள்ளாடும் இந்தியா; அதானி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக நடக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம்; அதிகரிக்கும் குற்றங்கள்; சீரழியும் இளைஞர்கள்; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

வங்கி கடன் மோசடி மன்னன்கள், ஆபரேஷன் தாமரை, தனியார்மயம், உலக பணக்காரர் பட்டியல், சட்டவிரோத செயல்கள் என எது எடுத்தாலும் ‘குஜராத்’ என்ற ஒரு பெயர் அடிபடாமல் இருப்பதில்லை. தற்போது ஒருபடி மேலே சென்று, போதை பொருட்கள் மூலம் நாட்டையே தள்ளாட வைக்கும் முக்கிய மையமாக குஜராத் முந்த்ரா துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தின் உரிமையாளர் உலகின் மூன்றாவது பணக்காரரான குஜராத்தை சேர்ந்த கவுதம் அதானி. பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பர். இந்த துறைமுகத்தில் இருந்துதான் நாடே இதுவரை காணாத வகையில் பெரியளவிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த துறைமுகம் வழியாகவே நாடு முழுவதும் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. இருந்தும் துறைமுகத்தின் உரிமையாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. துறைமுகத்தில் சோதனையும் இல்லை. ஆனால், நாட்டில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பாஜ கோஷம் போடுகிறது. இதை பார்க்கும்போது, ‘கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு ஒன்றிய அரசு அலைவது ஏன்?’ என்ற கேள்வி எழுகிறது.

ஒரு காலத்தில் நாட்டில் உள்ள துறைமுகம், விமான நிலையம், ரயில்வே போன்ற போக்குவரத்து மூலம் சரக்கு, பயணிகளை கையாண்டு வருவாய் பார்த்து வந்தது ஒன்றிய அரசு. பாஜ தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் தனியார்மயம் என்ற ஆபத்தான விஷயத்தை கையில் எடுத்தது. இன்று எல்லா துறைகளிலும் தனியார்மயம் காணப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பில் (விமான நிலையம், துறைமுகம், ரயில்வே) தொடங்கி பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்திலும் தனியாரின் ஆதிக்கம் தான் தலைதூக்கி உள்ளது. இதனால், விமான நிலையம், துறைமுகம், ரயில்வே ஆகிய போக்குவரத்தின் வழியாக சட்டவிரோத செயல்கள் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக, சமீப நாட்களாக போதை பொருட்கள் கடத்தல் அதிகரித்து உள்ளது. விமான நிலையம், ரயில்களில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவும், அதிகாரிகளின் உடந்தையாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், தங்கம் ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் சோதனையில் சிறிய அளவிலான போதை பொருட்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள அதானி வசம் உள்ள தனியார் துறைமுகமான முந்த்ரா துறைமுகத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.21,000 கோடி மதிப்பிலான போதை பொருள் (ஹெராயின்), சமீபத்தில், ஈரானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.550 கோடி மதிப்புள்ள போதை பொருள் (கோகைன்) பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த மாதம், வருவாய் புலானய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ), குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு படையுடன் (ஏடிஎஸ்) கூட்டு நடவடிக்கையில், கட்ச் மாவட்டத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்கு அருகிலுள்ள கொள்கலன் நிலையத்தில் நடத்திய சோதனையின் போது ரூ.1,300 கோடி மதிப்புள்ள சுமார் 260 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஈரானில் இருந்து சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பிபாவாவ் துறைமுகத்திற்கு வந்த கப்பல் கண்டெய்னரில் இருந்து ரூ.450 கோடி மதிப்புள்ள 90 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத்தின் அங்களேஸ்வர் பகுதியில் ரூ.1,026 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட மெபிட்ரான் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு ஒரு சில கடத்தல் மட்டுமே ரகசிய தகவலின்பேரிலும், சோதனையின் அடிப்படையிலும் சிக்கி உள்ளது. இந்த துறைமுகம் முழுக்க முழுக்க தனியார் வசம் உள்ளதால், இங்கு கையாளப்படும் சரக்குகளை ஒன்றிய அரசின் அமைப்புகள் நேரடியாக கண்காணிப்பதில்லை. இதனால், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இருந்து முந்த்ரா துறைமுகத்துக்கு போதை பொருள் கடத்தப்பட்டு, நாடு முழுக்க விற்பனை செய்யப்பட்டு வருகிறது.குஜராத்துக்கு அடுத்தபடியாக மும்பை, பெங்களூருவில் போதை பொருள் அதிகள வில் கடத்தப்பட்டு,நடிகர், நடிகைகள், ஐடி ஊழியர்கள் ஆகியோரை குறிவைத்து போதை விருந்து நடத்தப் படுகிறது. டெல்லியில் நேற்று ரூ.1200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

‘நாடு முழுவதும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மூலமாகவே போதைப் பொருட்கள் உள்ளே வருகின்றன. துறைமுகங்களைத் தனியார் மயமாக்கியதே இதற்குக் காரணம். போதை பொருள் கடத்தலில் முந்த்ரா துறைமுகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசே காரணம. விஜயவாடாவில் இருந்து தமிழகத்தில் அதிகளவில் போதை பொருள் கடத்தப்படுகிறது’ என்று சில நாட்களுக்கு முன் தமிழக அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி இருந்தார்.
குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசுகையில், ‘குஜராத் போதைப்பொருளின் மையமாக மாறியுள்ளது. அனைத்து போதை பொருட்களும் முந்த்ரா துறைமுகம் வழியாக செல்கிறது.

ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முந்த்ரா துறைமுகத்தில் 2 அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போதைப்பொருள் மீட்கப்படுவதற்கு காரணம் என்ன’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். போதை பொருள் பயன்பாட்டால் நாட்டின் எதிர்காலம் என்று சொல்லப்படும் இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி, பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.டி ஊழியர்கள் வரை ஆண், பெண் என்று பாலினம் பாரமல் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு போதை பொருள் மயக்கத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர்.

கொலை, பலாத்காரம் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதை பொருள் கடத்தப்படும் விமான நிலையம், ரயில்வே, துறைமுகங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அதிகார மையத்தின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் சர்வ சாதாரணமாக போதை பொருள் கடத்தல் கலாசாரம் பரவி வருகிறது. ‘ஊருக்குதான் உபதேசம்’ என்பதுபோல் சில தொழிலதிபர்களுக்கு நல்லது செய்கிறோம் என்று இருக்காமல், நாட்டு மக்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பை கருதி போதை கலாசாரத்தை ஒழிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

* அதானி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
முந்த்ரா துறைமுகத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இதுவரை டெல்லி சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஆப்கானிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது என்ஐஏ. டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனையும் நடத்தி உள்ளது. ஆனால், இதுவரை முந்த்ரா துறைமுகத்தில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. துறைமுகத்தின் உரிமையாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் இங்கிருந்துதான் சப்ளை செய்யப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டும் நிலையில், இதுவரை 8 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

300% அதிகரிப்பு
* 2017ம் ஆண்டு 2,146 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு 7,282 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, 300% அதிகம்.
*  2017ம் ஆண்டு 2,551 கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்., 172% அதிகரித்து, 2021ல் 4,386 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* 2017ல் 3,52,539 கிலோவாக இருந்த கஞ்சா பறிமுதல், 191% அதிகரித்து, 6,75,2031 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவில் ஒவ்வொரு 70 நிமிடங்களுக்கும் ஹெராயின் பறிமுதல் செய்யப்படுகிறது.
* டார்க்நெட் மூலம் 94% போதை பொருள் தொடர்பான விற்பனை நடந்துள்ளது.

அதானியின் துறைமுகங்கள் முனையங்கள்
* முந்த்ரா துறைமுகம்
* டாஜே துறைமுகம்
* மர்மகோவா முனையம்
* காட்டுப்பள்ளி துறைமுகம்
* விசாகப்பட்டினம் முனையம்
* கிருஷ்ணாப்பட்டினம்
* துறைமுகம்
* டுனா முனையம்
* ஹசீரா துறைமுகம்
* விழிஞ்சம் துறைமுகம்
* எண்ணூர் முனையம்
* தம்ரா துறைமுகம்

 போதை பொருள்    2017    2018    2019    2020    2021
    பறிமுதல்    வழக்கு    பறிமுதல்    வழக்கு    பறிமுதல்    வழக்கு    பறிமுதல்    வழக்கு    பறிமுதல்    வழக்கு
அபின்    2,551(கி)    1408    4,307 (கி)    1,175    4,488 (கி)    1,494    5,204 (கி)    1,617    2,611 (கி)    781
ஹெராயின்    2,146 (கி)    7,070    1,258 (கி)    7,748    3,231 (கி)    10,841    3,385 (கி)    9,112    2,865 (கி)    4,101
கோகைன்    69 (கி)    132    35 (கி)    103    66 (கி)    134    18 (கி)    66    8 (கி)    27

தடை செய்யாதது ஏன்?
* ஆப்கானில் அபின் போதை பொருள் உற்பத்தி செய்யப்படும் பாப்பிச் செடிகள் (கசகசா) 75 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.
* உலகளவில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட அபின் பயன்பாட்டிற்கு ஆப்கானிஸ்தான் தான் காரணம்.
* ஆப்கானிஸ்தானில் இந்த தொழில் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.
* பாப்பிச் செடிகள் பயிரிடுவோர் 10% தலிபான்களுக்கு வரி செலுத்த வேண்டும்.
* அபினை ஹெராயினாக மாற்றும் ஆய்வகங்களிலிருந்தும், சட்டவிரோத மருந்துகளை கடத்தும் வியாபாரிகளிடமிருந்தும் தலிபான்கள் வரி வசூல் செய்கிறார்கள்.
* சட்டவிரோத போதைப்பொருள் பொருளாதாரத்தில் தலிபான்களுக்கு 100 மில்லியன் டாலர் முதல் 400 மில்லியன் டாலர் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது.
* நாட்டில் புழங்கும் போதை பொருள் பெரும்பாலும் ஆப்கான், ஈரானில் இருந்து வருவதுதான். இதை தடை செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும், இதுவரை ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* தடையை மீறி கசகசா செடி
கசகசாவின் செடி, காய், பிசின், தண்டு என அனைத்தும் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கசகசா செடியின் காய் முற்றும் முன், அதை பிளேடால் கீறி அதிலிருந்து வழியும் பிசின் சேகரிக்கப்பட்டு, ‘கோகைன், ஹெராயின்’ போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் அனுமதி பெற்ற மருந்து நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் மட்டும், இதை பயிரிட முடியும். இந்தியாவில் மேற்கு வங்கம், ராஜஸ்தானில் மட்டும், கசகசா பயிரிட அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், இதை மீறி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கசகசா செடிகள் பயிரிடப்படுகின்றன.

* குஜராத்தில் இருந்து தான் கடத்தல்
தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பிற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டுதான் இங்கே கொண்டுவரப்படுகின்றன. முந்த்ரா துறைமுக அதிகாரிகள் மூலம் இது நடைபெறுகிறதா என்பதை ஆய்வுசெய்யும்படி நீதிபதி கூறி உள்ளார். வெளிநாடுகளில் எப்படி இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து இந்தியாவிலும் அந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று குஜராத் மாவட்ட நீதிபதியான பவார் தெரிவித்துள்ளார்.

ஜவுளி அதிபர் முதல் 3வது பணக்காரர் வரை: யார் இந்த அதானி
* குஜராத்தை சேர்ந்த கவுதம் அதானி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். முதலில் அகமதாபாத்தில் சிறிய அளவில் ஜவுளி தொழில் தொடங்கினார்.
* 1980ம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மும்பை சென்று வைர வியாபாரத்தில் ஈடுபட்டார்.
* 1988ம் ஆண்டு சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க மீண்டும் குஜராத் வந்து, பிளாஸ்டிக் ஆலையை தொடங்கி அதானி என்டர்பிரைசஸ் என பெயரிட்டார். பின்னர் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களை தொடங்கினார்.
* 1995ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை எடுத்தார்.
* 2000ம் ஆண்டு சிங்கப்பூரை சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்ய தொடங்கினார்.  2001ல் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டது.
* சுவிஸ் நிறுவனமான ஹோல்சிம் பங்குகளை ரூ.80 கோடிக்கு வாங்குகியதன் மூலம், இந்திய சிமெண்ட் துறையிலும் கவுதம் அதானி களமிறங்கி உள்ளார். சிமெண்ட் துறையில் கால் பதித்ததுமே அவரது குழுமம் நாட்டின் 2வது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளரானது.
* தொடர்ந்து, மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர்... என அனைத்திலும் வெற்றி கொடி நாட்டினார்.
* இந்தியாவில் துறைமுகம், அனல் மின்நிலையங்கள், காற்றாலை, சிமெண்ட் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், தற்போது அண்டை நாடான இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ளது.
* அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும், ஆறு நிறுவனங்கள் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டிருக்கிறது. ஆறில் ஐந்து நிறுவனங்கள் இந்தியாவின் டாப் 30 நிறுவனங்களில் இடம் பிடித்திருக்கின்றன.
* குஜராத் மாநிலத்தின் வணிகம் என்பது ஒரு தனி மனிதனின் (அதானி) அபரிமித வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது.
* 2008ம் ஆண்டு மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின் போது, அங்கு சிக்கி இருந்த பல விருந்தினர்களில் கவுதம் அதானியும் ஒருவர்.
* அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.இசட், அதானி என்டர்பிரைசஸ், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டோட்டல் காஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய  6 நிறுவனங்கள்தான் அதானி குழுமத்தின் டாப் நிறுவனங்கள்.
* இத்தனை வியாபாரங்கள் செய்தாலும் இன்று வரை அதானி சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்குவது அவரது துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்தான்.
* கவுதம் அதானியை பில்லியனராக உலகம் அறிந்து கொள்வதற்கு முன்பு, அவர் 1997ம் ஆண்டு சிலரால் அகமதாபாத் புறநகரில் வைத்து கடத்தப்பட்டார்.
* இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் அனல் மின் நிலையம், அதிக அளவில் சோலார் மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்கள், மிகப்பெரிய துறைமுக முதலாளி என அனைத்துக்கும் சொந்தக்காரர் அதானி.
* இந்தியாவில் கையாளப்படும் ஒட்டுமொத்த சரக்கில் சுமார் 25 சதவீதத்தை அதானி குழும நிறுவனங்கள் கவனித்து கொள்கிறது.
* தற்போது உலக அளவில் 3வது பணக்காரராகவும், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் கவுதம் அதானி உள்ளார். இவர், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ இதழின் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Tags : Drug Hub ,Gujarat ,India ,Adani port , Drug Hub Gujarat: A Tottering India; Illegal multi-crore trade through Adani port; increasing crimes; Degenerate youth; Questionable security
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...