சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக காவல் துறையின் இணையதளத்தில் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை எனக் கூறி சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துக்குமார், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை மட்டுமே இணையதளத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீவிரமான வழக்குகளை கையாளும் சிபிசிஐடியின் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிட்டால் அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஆதாரங்களை கலைக்கவும் வாய்ப்பாகிவிடும் என்பதால் முதல் தகவல் அறிக்கைகள் வெளியிடப்படுவதில்லை என்று விளக்கமளித்தார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இது சம்பந்தமாக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும். வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதற்காக முதல்  தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற காரணத்தையும் மனுதாரர் கூறவில்லை என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று எச்சரித்தனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: