×

ஒன்றிய பாஜ ஆட்சியில் வாழ்ந்தாலும் ஜிஎஸ்டி இறந்தாலும் ஜிஎஸ்டி: பிரகாஷ் கரத் குற்றச்சாட்டு

சென்னை: தங்களுக்கு எதிரான மாநில அரசுகளை புலனாய்வு முகமைகளை பயன்படுத்தி ஒன்றிய பாஜ அரசு முடக்க பார்க்கிறது என மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் குற்றம் சாட்டினார். இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் வியாசர்பாடி முல்லை நகரில் நேற்று முன்தினம் மாலை  நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் கரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரகாஷ் கரத் பேசியதாவது: ஒன்றிய அரசு உணவுப் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளனர். இது சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் என்பதை மறுக்க முடியாது. உணவுக்கு மட்டும்தான் என்றில்லை, சுடுகாட்டில் பிணத்தை எரிக்க வேண்டும் என்றால் கூட வரி விதிக்கப்படும் என அறிவித்துவிட்டு, பின்னர் அப்படியில்லை என விளக்கம் கொடுக்கிறார்கள். வாழ்ந்தாலும் ஜி.எஸ்.டி, செத்தாலும்  ஜி.எஸ்.டி என்பதை தான் நாம் மனித தன்மையற்ற வரிக் கொள்கையாக பார்க்கிறோம்.

திமுக ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, எல்.டி.எப் ஆட்சி நடக்கும் கேரளா, பீகார், தெலங்கானா போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் ஓரிரு மாநிலங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகளும் தங்களுக்கு எதிராக உள்ள மாநில அரசுகளை முடக்க பயன்படுத்தப்படுகிறது. முக்கிய தலைவர்களை மிரட்டி தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். இது ஜனநாயகத்தன்மையை சிதைக்கிறது. கல்வி, சுகாதாரம், மொழி போன்றவற்றில் மாநிலத்தின் உரிமைகளை தட்டிப் பறிக்கிறது. இதையெல்லாம் முறியடிக்க வேண்டும் என்றால், மோடி அரசின் கொள்கைகளை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே பாதையில் கொள்கைகளை சரியாக உணர்ந்து திரள வேண்டும்.


Tags : GST ,Union BJP ,Prakash Karat , Even if GST dies under Union BJP rule, GST: Prakash Karat alleges
× RELATED ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால்...