புதிய பென்ஷன் பிளஸ் திட்டம் எல்ஐசி அறிமுகம்

மும்பை: எல்ஐசி நிறுவனம் புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பங்குச்சந்தை சார்ந்த, லாப பங்களிப்பற்ற, தனிநபர் ஓய்வூதிய திட்டமாகும். காப்பீட்டு வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், எல்ஐசியின் முன்னாள் தலைவர்கள் ஜி.என்.பாஜ்பாய், டி.எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திட்டத்தை ஒரே பிரீமியமாகவோ அல்லது தவணை முறையில் செலுத்தும் பிரீமியமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.  

இதுபோல் பிரீமியம் தொகை, பாலிசி காலத்தை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொள்ளலாம். தவணை முறையில் செலுத்தப்படும் பிரீமியத்துக்கு கூடுதல் உத்தரவாத தொகையாக 5 சதவீதம் முதல் 15.5 சதவீதம் வரையிலும், ஒரே பிரீமியமாக தேர்வு செய்தால் 5 சதவீதம் வரையிலான கூடுதல் உத்தரவாத தொகை, பாலிசி முடிவடையும் ஆண்டுக்கு ஏற்ப கிடைக்கும். வசதிக்கேற்ப பிரீமியம் செலுத்துதல், பங்குச்சந்தை சார்ந்த நிதிப்பயன்கள், பகுதியாக பணம் எடுக்கும் வசதி ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளன. இந்த திட்டத்தில் இளம் வயதிலேயே முதலீடு செய்வது, ஓய்வுக்காலத்தில் பலன் அளிக்கும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: