×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சபலெங்கா: நடாலை வீழ்த்தினார் டியபோ

கொல்கத்தா: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் மோதிய அமெரிக்க வீரர் பிரான்செஸ் டியபோ போராடி வென்று முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். 4வது சுற்றில் நடால் (36 வயது, 3வது ரேங்க்) சவாலை எதிர்கொண்ட டியபோ(24 வயது, 26வது ரேங்க்) 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி, 34 நிமிடம் போராடி வென்றார். இந்த வெற்றியின் மூலம் டியபோ முதல் முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதியில் நுழைந்துள்ளார்.

23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதுடன் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், நடால் அதிர்ச்சி தோல்வி கண்டது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு ஆண்டில் நடந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் யாரிடமும் தோற்காமல் வீறுநடை போட்ட நடாலின் சாதனை பயணம் நேற்று முடிவுக்கு வந்தது. ஆஸி. ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற நடால்,  விம்பிள்டன் அரையிறுதியில் காயம் காரணமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோதிய கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) 6-4, 3-6, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 54 நிமிடம் நீடித்தது. ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), யானிக் சின்னர் (இத்தாலி), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டேனியலி கோலின்சை வீழ்த்தினார். நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோரும் 4வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.



Tags : Sabalenka ,Diabo ,Nadal ,US Open , Sabalenka: Diabo defeats Nadal in US Open tennis quarterfinals
× RELATED சில்லி பாயின்ட்…