×

ரோகித் அதிரடி அரை சதம்: இந்தியா 173 ரன் குவிப்பு

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கையுடனான சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில், கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக அனுபவ ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் இடம் பெற்றார். கே.எல்.ராகுல், ரோகித் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.

ராகுல் 6 ரன் எடுத்து தீக்‌ஷனா பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராத் கோஹ்லி 4 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தில்ஷன் மதுஷங்கா வேகத்தில் கிளீன் போல்டானார். இந்தியா 2.4 ஓவரில் 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ரோகித் - சூரியகுமார் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ரோகித் 32 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். ரோகித் - சூரியகுமார் இணைந்து 3வது விக்கெட்டு 97 ரன் சேர்த்தனர். ரோகித் 72 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), சூரியகுமார் 34 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி மீண்டும் சரிவை சந்தித்தது.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன், தீபக் ஹூடா 3 ரன், ரிஷப் பன்ட் 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கருணரத்னே பந்துவீச்சில் புவனேஷ்வர் டக் அவுட்டாக, இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. அஷ்வின் 15 ரன், அர்ஷ்தீப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா 3, கருணரத்னே, தசுன் ஷனகா தலா 2, தீக்‌ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.


Tags : Rohit ,India , Rohit action half century: India 173 runs
× RELATED ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி