ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் 2ம் முறையாக நிரம்பியது

சின்னாளபட்டி: தொடர் மழை காரணமாக, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இந்தாண்டு 2வது முறையாக  நிரம்பியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. அணையின் உயரம் 23.5 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மழை பெய்யும்போது இந்த நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வரும்.

இந்த நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாநராட்சி மற்றும் திண்டுக்கலுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழியில் உள்ள ஆத்தூர், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், சின்னாளபட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காலை 6 மணியளவில் தண்ணீர் மறுகால் பாய தொடங்கியது.  

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் அதனருகே உள்ள உபநீர் தேக்கம் ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்தாண்டு ஜன.1ல் நீர்த்தேக்கம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. தற்போது செப்.5ல் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இனி 6 மாத காலத்திற்கு திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் பிரச்னை இருக்காது’’ என்றார். அணையில் 2வது முறையாக தண்ணீர் மறுகால் பாய்வதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: