திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு தலைமையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையானது, தனது கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை புரியும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து, இன்று ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைத்தல் தொடர்பாக வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாற்றுப்பாதை அமைத்தல் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தொடர்புடைய துறைகளின் அனுமதி பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி எம்.கவிதா, திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் திரு.ராம் மோகன், வனச்சரக அலுவலர் திரு.அருள்நாதன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஜெ.ஹஸ்வத்பேகம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு. விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் திரு.தயாநிதி, வேலூர் மண்டல இணை ஆணையர் திரு. சி.லட்சுமணன், துணை ஆணையர்/செயல் அலுவலர் திருமதி பி.விஜயா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திருமதி சசிகலா, நகராட்சி ஆணையர் திரு. சி.ராமஜெயம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.