×

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் போது இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை: அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின்போது இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், மற்ற சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவம், வரும் 25ம்தேதி தொடங்கி அடுத்தமாதம் 5ம்தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின்போது மாடவீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோயிலுக்குள் 2 பிரம்மோற்சவங்கள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. எனவே இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் வரும் வாய்ப்பு உள்ளதால், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் விஐபி தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனம் போன்ற அனைத்து முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரூ300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மற்றும் பிற அறக்கட்டளைகளின் நன்கொடையாளர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளுக்கு, அதிகாரிகளுக்கு மட்டும் விஐபி தரிசனம் இருக்கும்.
அதேபோல் 50 சதவீத அறைகள் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அறைகள் திருமலையில் உள்ள பல்வேறு கவுன்டர்கள் மூலம் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஒதுக்கப்படும்.

அக்டோபர் 1ம்தேதி கருடசேவை என்பதால் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, அறக்கட்டளைகளின் நன்கொடையாளர்கள் மற்றும் ஓய்வறை கட்டிய நன்கொடையாளர்களுக்கு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படாது. நன்கொடையாளர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல், மிகவும் புனிதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் திருமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் திருமலையில் அறைகள் கிடைப்பது குறைவாக இருக்கும். எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருப்பதியில் தங்கும் விதமாக அறைகள் பெற்று கொள்ளவேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupati Eyumalayan ,Temple ,Brahmotsavam , Priority for free darshan devotees during Tirupati Eyumalayan Temple Brahmotsavam: All special darshans canceled
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!