நடிகை அமலாபாலிற்கு பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட ஆண் நண்பர் பவீந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கியது வானூர் நீதிமன்றம்

விழுப்புரம்: நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டியதாக புகாரில் கைது செய்யப்பட்ட படத்தயாரிப்பாளருக்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் அமலாபால் மற்றும் அவரது ஆண் நண்பர் பவீந்தர் சிங் என்ற இருவரும் தங்கி சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் , அமலாபாலுக்கு கடந்த 2018ம் ஆண்டிலிருந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், திரைப்படத்துறையிலிருந்து தனக்கு வரவேண்டிய பணத்தில்மோசடி செய்ததாகவும்  அமலாபாலின் மேலாளர் விக்னேஷ் 15 பக்கங்கள் கொண்ட புகாரினை விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் கடந்த 30ம் தேதி சினிமா தயாரிப்பாளர் பவீந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது மிரட்டல் மோசடி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பவீந்தர் சிங்கை கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி பவீந்தர் சிங் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அமலாபாலுக்கும் தனக்கும் நடந்த பதிவு திருமணத்திற்கான சான்றிதழை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பவீந்தர் சிங்கிற்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Related Stories: