யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்; நடாலை வீழ்த்தினார் டியாஃபோ: சபலென்கா, பிளிஸ்கோவா காலிறுதிக்கு தகுதி

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த 4ம் சுற்றில் முன்னணி வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாஃபோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். சர்வதேச ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 3ம் இடத்தில் உள்ள ரஃபேல் நடால், கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் 22 ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்று, உலக சாதனை படைத்துள்ளார். இதில் அவர் யு.எஸ்.ஓபனில் மட்டுமே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையரில்  21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இந்த ஆண்டு யு.எஸ்.ஓபனில் விளையாடவில்லை. எனவே இந்த ஆண்டு யு.எஸ்.ஓபன் பட்டத்தை நடால் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்களிடையே இருந்தது. நேற்று பின்னிரவில் ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் நடந்த 4ம் சுற்றுப் போட்டியில் நடாலும், அமெரிக்காவின் 24 வயதேயான இளம் வீரர் பிரான்சிஸ் டியாஃபோவும் மோதினர். ஏடிபி தரவரிசை

யில் தற்போது 26வது இடத்தில் உள்ள டியாஃபோ, முதல் செட்டை மிக எளிதாக 6-4 என கைப்பற்றி, நடாலுக்கு அதிர்ச்சியளித்தார்.

2வது செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களை 6-4, 6-3 என டியாஃபோ எளிதாக கைப்பற்றி, நடாலின் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்ற கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த வெற்றியின் மூலம் 2018ம் ஆண்டுக்கு பின்னர் யு.எஸ்.ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீரர் என்ற சாதனையும் டியாஃபோவின் வசமானது. ‘‘என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. இன்று நான் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நடால் மீது எனக்கு மிகவும் மதிப்பு உண்டு.

ஆனால் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தானே இங்கு வந்திருக்கிறேன். அதைத்தான் இப்போது செய்திருக்கிறேன்’’ என்று போட்டிக்கு பின்னர் அளித்த பேட்டியில் டியாஃபோ மகிழ்ச்சியுடன் கூறினார். இதுபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 4ம் சுற்றுப் போட்டியில்  பெலாரசின் முன்னணி வீராங்கனை அரைனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை டேனியல் கோலின்சை 3-6, 6-3, 6-2 என 3 செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-5, 6-7, 6-2 என 3 செட்களில் பெலாரசின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: