இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்: இலங்கை கேப்டன் ஷனகா பேட்டி

குவைத்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்தியா வெற்றிபெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களம் இறங்குகிறது. இன்றைய போட்டியில் இந்தியா அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பேட்டிங் வரிசை மிகவும் பலமிக்கதாகத்தான் இருக்கிறது. பந்துவீச்சில் சாஹல் சிறப்பாக செயல்படவில்லை.

எனவே அவருக்கு பதில் இன்று அக்‌ஷர்பட்டேலும், ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ்கார்த்திக்கும் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்த  மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுவதால் `டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் டாசில் வெற்றி பெறும் அணிக்கு  அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு  அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல்  இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 175 ரன்களை சிறப்பாக விரட்டிப்பிடித்து வெற்றிபெற்றனர். இதில் யாரும் அரை சதம் அடிக்கவில்லை. பலர் 30க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து, தங்களது பேட்டிங் வரிசையின் வலிமையை வெளிக்காட்டினர். இதனால், இலங்கை அணியில் 7, 8 விக்கெட்கள் விழுந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றுதான் கருதப்படுகிறது.

மொத்தத்தில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முயற்சியில் இந்திய வீரர்கள் ஆவேசமாகவும் அதிரடியாகவும் ஆடவேண்டியது அவசியம் ஆகும். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில், “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா சிறப்பாகத்தான் செயல்பட்டது. கடைசி நேரத்தில் செய்த சில தவறுகளால் தோற்றனர். இந்திய வீரர்கள் எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள். எங்களுக்கு எதிரான போட்டிக்கு அவர்கள் நிச்சயம் முழு அளவில் தயாராக இருப்பார்கள்.

கடந்த போட்டியில் தோற்றதால், அவர்கள் அழுத்தங்களுடன் இருப்பார்கள் எனக் கூறிவிட முடியாது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எங்களது யுக்தி, இரண்டு மூன்று பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைப்பதுதான். கடந்த போட்டிகளில் இதனை செய்துதான் வென்றிருக்கிறோம். இந்திய அணிக்கு எதிராகவும் இதனை நாங்கள் செய்தால், நிச்சயம் வெற்றிபெறுவோம். மேலும் இப்போது இந்திய அணியில் உள்ள பந்துவீச்சாளர்களை அனுபவமற்றவர்கள் எனக் கூறிவிட முடியாது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். எனவே கடும் சவால்களை அவர்கள் அளிப்பார்கள். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.

Related Stories: