×

அய்யம்பாளையம் மருதாநதி அணை வடக்கு, தெற்கு வாய்க்காலில் 10 ஆண்டுக்கு பின் தண்ணீர் திறப்பு

பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மருதாநதி அணை வடக்கு மற்றும் தெற்கு வாய்க்காலில் 10 ஆண்டுகளுக்குப் பின்பு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணை முழுகொள்ளளவுடன் உள்ளது. அணையில் தற்போது 180 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. அணைக்கு தற்போது 150 கனஅடிவீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையின் பிரதான வாய்க்காலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மருதாநதி அணையில் வடக்கு மற்றும் தெற்கு வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் பகுதிகள் சிதலமடைந்த நிலையில் இருந்ததால், தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த வாரம் சித்தரேவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மருதாநதி அணை வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் தண்ணீர் விரைவில் திறந்து விடப்படும் என கூறினார். அதன்படி பொதுப்பணி துறை சார்பில் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று வடக்கு, தெற்கு வாய்க்காலில் சுமார் 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆத்தூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ராமன் தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மருதாநதி அணையின் உதவி பொறியாளர் கண்ணன், அய்யம்பாளையம் மின்வாரிய உதவி பொறியாளர் செல்லகாமாட்சி, திண்டுக்கல் ஊராட்சி குழுத்தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஹேமலதா மணிகண்டன், அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவர் ரேகா அய்யப்பன், துணை தலைவர் ஜீவானந்தம், அய்யம்பாளையம் திமுக நகர செயலாளர் தங்கராஜ், ஆத்தூர் மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், சித்தரேவு ஊராட்சி தலைவர் வளர்மதி மலர்கண்ணன், ஊராட்சி செயலாளர் சிவராஜன், தேவரப்பன்பட்டி ஊராட்சி தலைவர் ரேவதி மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். 10 ஆண்டுகளுக்கு பின்பு 2 வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பட்டிவீரன்பட்டி, எம்.வாடிப்பட்டி, சித்தரேவு, நெல்லூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘மருதாநதி அணையின் வடக்கு மற்றும் தெற்கு வாய்க்கால்களில் 40 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. புதிதாக 2 வாய்க்கால்களையும் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Ayampalayam Marudanathi Dam North ,South Maikkal , Pattiveeranpatti: After 10 years, water was released in the north and south drains of the Ayyampalayam Marudanadi dam.
× RELATED வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை...