×

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் 2வது முறையாக நிரம்பியது-மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி : தொடர் மழையால் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் இந்த ஆண்டு 2வது முறையாக நிரம்பி தண்ணீர் மறுகால் சென்றதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்யும் மழைநீர் அணைக்கு வரும்படி இயற்கையாகவே நீர்வரத்து வாய்கால்கள் அமைந்துள்ளது.

மொத்தம் 23.5 அடி உயரத்திற்கு நீர் தேங்கும் கொள்ளளவுள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாநராட்சி மற்றும் திண்டுக்கலுக்கு தண்ணீர் செல்லும் வழி கிராமங்களாக ஆத்தூர், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், சின்னாளபட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் செல்கிறது. கடந்த 2 வாரங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காலை 6 மணியளவில் தண்ணீர் மறுகால் வழியாக வெளியேற தொடங்கியது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் அதனருகே உள்ள உபநீர் தேக்கம் ஆகிய இரண்டு நீர்த்தேக்கத்திலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இப்போது செப்டம்பர் 5ம் தேதி தண்ணீர் மறுகால் பாய்ந்துள்ளது. இனி 6 மாத காலத்திற்கு திண்டுக்கல் மாநகராட்சிக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது’ என்றார். அணையில் 2வது முறையாக தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags : Kamaraj , Chinnalapatti: Due to incessant rains, the Athur Kamaraj Reservoir was filled for the 2nd time this year and the water overflowed.
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...