×

ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் 375 மாணவிகள் மாதம் ₹1000 பெற டெபிட் கார்டு-அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவியர் 375 பேர் மாதம் ரூ.1000 பெற டெபிட் கார்டு, புதுமைப்பெண் பெட்டகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.தமிழக பட்ஜெட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மாற்றப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்று மாற்றுவதாக அறிவித்தார்.

அதன்படி அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இளங்கலை படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். புதுமைப்பெண் திட்டம் என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. கல்லூரி மேல் படிப்பை மாணவியர் தொடர்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜூன் 26 முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் மாணவியர் பெயர் பதிவு செய்யலாம் உயர்கல்வி துறை உத்தரவிட்டது. இதன்படி, ஆதார், வங்கி கணக்கு விபரம், கல்வி சான்றிதழ்களை penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவியர் பதிவேற்றம் செய்தனர். விண்ணப்பத்தில் கோரிய விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யவும், திருத்தம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதியுடைய மாணவியர் அனைவருக்கும் ரூ.1000 கிடைக்க வேண்டும் என்ற அரசின் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை பல்வேறு முறை நீட்டித்து உயர் கல்வி துறை உத்தரவிட்டது.

ஜூலை 10ம் தேதி என 2ம் கட்டம் அறிவித்த அவகாசத்தை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து கூடுதல் அவகாசம் அளித்தது. மாணவியரின் அனைத்து விவரங்களும் பதிவேற்றப்பட்டதையடுத்து, இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது.

கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்டத்தில் 13 கல்லூரிகளில் பயிலும் மாணவியர் 375 பேருக்கு டெபிட் கார்டு மற்றும் புதுமைப்பெண் பெட்டகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். அவர் தெரிவிக்கையில், ‘‘வரலாற்று சிறப்புமிக்க திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுத்தியுள்ளார். மாணவியரின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும். இம்மாணவியர் பிற கல்வி உதவித்தொகை பயனாளிகளாக இருந்தாலும் இத்திட்டத்திலும் உதவி பெறலாம்’’ என்றார்.

விழாவில் நவாஸ் கனி எம்பி, கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், சமூக நல அலுவலர் சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), புல்லாணி (திருப்புல்லாணி), முஹமது முக்தார்(திருவாடானை), மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசபாண்டியன், வேதாளை ஊராட்சி தலைவர் செய்யது அல்லாபிச்சை, மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தவ்பீக் அலி, மண்டபம் பேரூராட்சி கவுன்சிலர் பூவேந்திரன், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதி ஆலோசனைக்குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Minister ,Rajakannapan ,Ramanathapuram , Ramanathapuram: 375 students of Ramanathapuram District College to get Rs.1000 per month through Debit Card, Innovation Fund, Backward Welfare Department
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...