விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது; விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பேட்டி

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஏகனாபுரம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கருத்துகேட்க  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் நேற்று முன்தினம் மாலை  காஞ்சிபுரம் வருகை தந்தார்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை கையகப்படுத்துவதில் விவசாயிகளுக்கும் அரசுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும், பொதுமக்களும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை.

அங்குள்ள விளைநிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை மிக குறைவாக உள்ளது, வசிக்கும் இடங்களை தவிர்த்து பிற இடங்களை விமான நிலையத்துக்கு தர தயாராக இருப்பதாக வாதங்களை முன் வைக்கிறார்கள். அவர்களிடம் நேரடியாக கருத்து கேட்டு எங்கள் அமைப்பின் மூலமாக தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வைப்பதற்காக செல்ல முயன்றோம்.விவசாயிகள் அனுமதி இல்லாமல் விளைநிலங்களை அபகரிக்கும் சட்டம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, தற்பொழுது முதலமைச்சர் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது, குடியிருப்பு பகுதியை சந்தை மதிப்பை விட அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொண்டு விவசாய சங்கங்களை பொதுமக்களை சந்திக்க காவல்துறையை வைத்து தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: