×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னைப் புறநகர் பகுதியான திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் கோயிலில் திருமணம் செய்ய 30க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், வேண்டுதலின் காரணமாக முன்பதிவு செய்யாமல் பலரும் திருமணம் செய்ய வந்தனர். இதன் காரணமாக கோயிலின் வெளிப்பிரகாரம், உட்பிரகாரங்களில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக நின்று திருமணம் செய்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் பலரும் தங்களது வாகனங்களை கோயிலை சுற்றிலும் உள்ள சன்னதி தெரு, சன்னதி சந்து தெரு, நான்கு மாடவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றனர். மாடவீதிகளில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்களில் வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் திருமணங்களுக்கு வந்தவர்களும் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர். நேற்று ஒரே நாளில் திருமணங்களுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

திருமண மண்டபங்கள் மற்றம் கோயிலில் நடைபெற்ற திருமணங்களுக்கு உணவு சப்ளை செய்ய வந்த கேட்டரிங் நிறுவன வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்கின. நேற்று திங்கட்கிழமை என்பதால் பலரும் வேலைக்கு செல்வதற்காக திருப்போரூர் வழியாக சென்னையை நோக்கி கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். இதன் காரணமாக ஓஎம்ஆர் சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேலானது. மேலும், திருப்போரூர் ரவுண்டானாவில் தொடங்கி இள்ளலூர் சந்திப்பு வரை வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு வரிசை கட்டி நின்றன. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து திருப்போரூர் பகுதியில் பெரிய அளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Tiruppurur Kandaswamy Temple , More than 100 weddings on a single day at Tiruppurur Kandaswamy Temple
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 4...