அகரம்தூளி கிராமத்தில் அபாயகரமான சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்; எச்சரிக்கை பலகை வைக்கவும் வலியுறுத்தல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அகரம் துளி கிராமத்தில் அபாயகரமான சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். உத்திரமேரூர் அடுத்த அகரம்தூளி, அத்தியூர், மேல்தூளி ஆகிய கிராமம் முதல் காவனூர்புதுசேரி செல்லும் சாலை உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை கிராம மக்களின் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் கிராம மக்கள் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் முதியோர் என பல்வேறு தரப்பினர் காவனூர்புதுச்சேரியில் உள்ள வங்கிகளுக்கு சென்று வருவர். மேலும் காவனூர்புதுசேரி அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்கள் இந்த சாலை வழியாகத்தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர். விவசாய நிலங்கள் சூழ்ந்த இந்த சாலை விவசாயிகளுக்கு மிகவும் முக்கிய சாலையாக உள்ளது.

இந்நிலையில் இந்த சாலைக்கு நடுவே 4 இடங்களில் எஸ் வடிவிலான அபாயகரமான வளைவுகள் உள்ளது. இந்த வளைவு பகுதியில் வேகத்தடை ஏதும் அமைக்கப்படாமலும்,. சாலையோரங்களில் எச்சரிக்கை பலகையும்  வைக்கப்படாமலும் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த சாலையின் வளைவுகள் தெரியாமல் கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இரவு நேரங்களில் முதியோர்கள், நோயாளிகளின் இந்த சாலை பயணமானது அபாயகரமாகவே உள்ளது. எனவே அபாயகரமாக வளைவு பகுதிகளில் வேகத்தடை அமைத்து எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: