×

நீட் தேர்வு விடைத்தாள் மாறிவிட்டதாக ஐகோர்ட்டில் சென்னை மாணவி மனு: அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி அனுமதி

சென்னை:  நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல, விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  இதில், தனது விடைத்தாள் மாறி விட்டதாக கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்வில் 13 கேள்விகளுக்கு மட்டும் தான் விடையளிக்காத நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளது.

விடைத்தாளின் இடதுபுறம் இடம்பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடைத்தாளில் உள்ள கைரேகையை சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என்று கண்டுபிடிக்க முடியும். தனது எனவே, விடைத்தாளை தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்.  மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படியும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.



Tags : Chennai ,ICourt ,NEET , Chennai student's plea in ICourt that NEET answer sheet has been changed: Judge allows hearing tomorrow as an urgent case
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு