×

மயிலாப்பூர் தாதா சிவக்குமார் கொலைக்கு பழி தீர்க்க கோர்ட் வளாகத்தில் கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்ய முயற்சி: கத்தியுடன் வந்த 3 பேர் சுற்றிவளைப்பு: வழக்கறிஞர்கள் அலறியடித்து ஓட்டம்

சென்னை: மயிலாப்பூர் தாதா சிவக்குமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே 5 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் சுற்றி வளைத்து கொலை செய்ய முயன்றனர். சென்னையில் பிரபல தாதாவாக வலம் வந்தவர் மயிலாப்பூர் சிவக்குமார். இவர் மீது  இரட்டை கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ‘ஏ -பிளஸ்’ வகை ரவுடியான இவரை, 2021ம் ஆண்டு  மார்ச் 4ம் தேதி அசோக் நகரில் வைத்து 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

இந்த கொலையில், ஜாம்பஜாரை சேர்ந்த ரவுடி தோட்டம் சேகர் மகன் அழகுராஜா, 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை கொலைக்கு பழிவாங்க கூலிப்படை தலைவன் மதுரை பாலா உதவியுடன் தாதா சிவக்குமாரை கொன்றது  அசோக் நகர் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து, தோட்டம் சேகர் மகன் அழகுராஜா, கூலிப்படை தலைவன் மதுரை பாலா உள்ளிட்டோரை போலீசார் கைது ெசய்தனர். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே பிரபல தாதா சிவக்குமாரின் ஆதரவாளர்கள், தனது தலைவனை கொலை செய்த அழகுராஜா மற்றும் கூலிக்கு ஆட்களை அனுப்பிய ரவுடி மதுரை பாலா உள்ளிட்டோரை பழி தீர்க்க சிவக்குமார் உடல் முன்பு சபதம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறையிலேயே கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்ய முயற்சிகள் நடந்தது. இதையடுத்து, ரவுடி மதுரை பாலாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாதா மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து நேற்று மதியம் ரவுடி மதுரை பாலா வேனில் அழைத்து வரப்பட்டார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் இருந்து இறங்கிய ரவுடி மதுரை பாலா, நீதிமன்றதில் ஆஜராக அந்த வளாகத்தில் நடந்து சென்றுக்ெகாண்டிருந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்துக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்த முகமூடி அணிந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்யும் நோக்கில் கத்தி, இரும்பு கம்பியுடன் பாய்ந்தது. முகமூடி அணிந்த நபர்களை பார்த்ததும் விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த, அங்கிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு ரவுடி மதுரை பாலாவை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமூடி கும்பல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றது. இதனால், உஷாரான போலீசார், தாக்குதல் நடத்த முயன்ற 5 பேரை துப்பாக்கி முனையில் பிடிக்க முயன்றனர். அதற்குள் சுதாரித்து கொண்ட 2 முகமூடி ஆசாமிகள் கோர்ட் வளாகத்தில் இருந்து தப்பினர். எனினும், அதில் 3 பேரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். கொலை கும்பலிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. சினிமா காட்சிகள் போல் நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவத்தை பார்த்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் இருந்து உயிர் தப்ப அலறியடித்தபடி நீதிமன்றத்தின் நாலாபுறமும்  சிதறி ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

பின்னர் பிடிபட்ட 3 பேரையும் கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தாதா சிவக்குமார் ஆதரவாளர்களர்களான செனாய்நகர் சக்திவேல்(23), அருண்(24), அப்துல்லா(24) என தெரியந்தது. இவர்கள் மயிலாப்பூர் தாதா சிவக்குமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கில், கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்ய நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர் கோட்டூர்புரம் போலீசார் சக்திவேல், அருண், அப்துல்லா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் எடுத்து துரித நடவடிக்கையால் நீதிமன்ற வளாகத்தில் நடக்க முயன்ற கொலை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. எனவே குற்றம் நடப்பதற்கு முன்பே குற்றவாளிகளை பிடித்த போலீசாரை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டி உள்ளார்.


Tags : Madurai Bala ,Dada Sivakumar ,Mylapore , Attempt to kill mercenary leader Madurai Bala in court complex to avenge Dada Sivakumar's murder in Mylapore: 3 knife-wielding men surrounded n lawyers running screaming
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...