ஆவடியில் இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடக்காமல் இருக்க தற்காலிக தடுப்பு

ஆவடி: ஆவடியில் இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடக்காமல் இருக்க தற்காலிக தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆவடி ரயில் நிலையத்தில் இருபுறமும் எல்.சி., கேட் 8 உள்ளது. இந்த ரயில்வே கேட் பெரும்பாலும் மூடியே இருக்கும். இந்த ரயில்வே கேட்டை நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு காரணங்களுக்காக கடந்து செல்கின்றனர். இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடந்து வந்தன. ஆவடி ரிசர்வ் போலீசார் இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் மீது அபராதங்கள் விதித்து வந்தனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத வாகன ஓட்டிகள் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து, எல்.சி., கேட் 8ன் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்லாதவாறு தண்டவாளத்தின் குறுக்கு கல்லை கொண்டு தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `ரயில் நிலையத்தில் ஏற்படும் தொடர் விபத்தால், தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, எல்.சி.,கேட் 8ன் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: