பலாத்கார விவகாரம் காரணமா? கர்நாடக மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை

பெலாகவி: கர்நாடக மாநிலம், பெலாகவி மாவட்டத்தில் நிஜின்ஹால் கிராமத்தில் குரு மடிவாலேஷ்வரர் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் மடாதிபதி பசவ்சித்லிங்கா என்ற சாமியார் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மடாதிபதி எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்தது. அதில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது மரணத்துக்கு நான் தான் காரணம். எனது மரணம் தொடர்பாக யாரிடமும் விசாரிக்க கூடாது’ என்று எழுதப்பட்டுள்ளது.

எனவே சாமியார் பசவ்சித்லிங்கா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி, விடுதி மாணவிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியான ஆடியோவில் பல மடாதிபதிகள் இதுபோல பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளதாக பேசும் பெண்கள், நிஜின்ஹால் மடத்தின் பெயரையும் குறிப்பிடுகின்றனர். கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்தாக கூறப்படும் மடாதிபதி பசவ்சித்லிங்கா தற்கொலை செய்து கொண்டிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: