சூலூர் அருகே மது குடித்த விவசாயிகள் 2 பேர் பலி

சூலூர்: சூலூர் அருகே மது குடித்த 2 விவசாயிகள் இறந்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே பொன்னாக்கணகானி பகுதியில் வசித்தவர்கள் வேலுச்சாமி (55), அவரது உறவினர் மனோகரன் (50). விவசாயிகள். நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இருவரும் அங்கு மது குடித்தனர். ரூ.310 விலையுள்ள மது பானத்தை ஒரு குவாட்டர் வாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது குடித்த சிறிது நேரத்திலேயே வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மனோகரன் நடந்து செல்ல முயன்றபோது மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த சூலூர் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடம் நெகமம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் நெகமம் போலீசார் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் அருந்திய மதுபானம் அங்குள்ள டாஸ்மாக் கடையில் நீண்ட நாட்களாக விற்பனைக்கு வரவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இறந்தவர்கள் வாங்கி குடித்தது போலி மதுபானமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இறந்தவர்கள் குடித்த மது பாட்டில், உணவு வகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: