×

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல்காந்தி நாளை நடைபயணம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை நாளை தொடங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார். இதற்காக, ராகுல் காந்தி இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே நாளை தொடங்குகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பயணத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதற்காக, இன்று மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ராகுல் காந்தி சென்னை புறப்படுகிறார். இரவு 8 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருகிறார். அங்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், இரவு சென்னையில் தங்கும் ராகுல்காந்தி, நாளை (7ம் தேதி) காலையில், சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

அதன்பின்பு, மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பி வருகிறார். பகல் காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். குமரி மாவட்டத்தில் நாளை தொடங்கி 8, 9, 10 தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி 11ம் தேதி காலை கேரள மாநிலம் செல்கிறார். கன்னியாகுமரி வருகை தரும் ராகுல்காந்தி முன்னதாக நாளை மாலை 4 மணியளவில் தனி படகில் சென்று திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவிடம், காமராஜர் மண்டபம் ஆகியவற்றில் மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்திவிட்டு நடைபயணத்தை தொடங்குகிறார்.

அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து 600 மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டு பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேருகிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று 2ம் நாளாக ஆய்வு செய்தார். கன்னியாகுமரியில் நடந்து வரும் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி, காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

* ராகுல் காந்தியுடன் 300 பேர் நடைபயணம்
ராகுல்காந்தியுடன் 300 பேர் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். இதில் 100 பேர் அவருடன் டெல்லியில் இருந்து வரும் தலைவர்கள் மற்றும் கட்சியினர். 100 பேர் தமிழ்நாட்டில் இருந்து நடைபயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். மேலும் 100 பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடை பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்கள் முன்னூறு பேரும் ராகுல்காந்தியுடன் நடை பயணத்தில் குமரி மாவட்டத்தில் பங்கேற்கின்றனர்.

* கேரவனில் ஓய்வெடுக்கும் ராகுல்
ராகுல்காந்தி மற்றும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் தங்க, ஓய்வெடுக்க வசதியாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 60 கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டுள்ளன. இவை ராகுல்காந்தி தங்குமிடங்கள், ஓய்வெடுக்கும் இடங்களில் அவருக்காகவும், அவருடன் வருகின்ற தலைவர்களுக்காகவும் பயன்படுத்தப்படும். இவை கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு வந்து சேர்ந்தன. இந்த கேரவனில் படுக்கை வசதி, சமையல் அறை, கழிவறை, குளியல் அறை போன்றவை உட்பட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Tags : Rahul Gandhi ,Kanyakumari ,Gandhi ,Mandapam ,M.K.Stalin , Rahul Gandhi's walk from Kanyakumari Gandhi Mandapam to be inaugurated by M.K. Stalin
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...