×

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம்கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க கோரிய ரிட் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணை நடைமுறைகள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்திலும், இதுபோன்ற குற்ற வழக்குகள் விசாரிக்கப்படவில்லை. எனவே சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்க வேண்டிய குற்ற வழக்குகளை தொடர் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இம்மனுவானது, இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையத்திற்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கும் அங்கு நிலுவையில் உள்ளது.

இந்த மனுவை புதியதாக இடையீட்டு மனுவாக மனுதாரர் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பொதுநல மனுவாக தாக்கல் செய்ய வேண்டியதில்லை’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதையடுத்து, மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

Tags : MB , Petition against MPs, MLAs dismissed: Supreme Court orders
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி