வேலூரில் தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறிய சாலை: உடனே சீரமைக்க கோரிக்கை

வேலூர்: வேலூரில் தொடர் மழை காரணமாக அம்மணாங்குட்டை சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதை உடனே சீரமைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. 47வது வார்டு சலவன்பேட்டை அம்மணாங்குட்டை சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆங்காங்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப்லைன்களில் கசிவு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

இதையடுத்து இந்த சாலையில் மாநகராட்சி பணியாளர்கள் பழுதை நீக்குவதற்காக ஆங்காங்கு பள்ளம் தோண்டியுள்ளனர். இதில் பணி முடிந்த இடங்களில் மண்ணை மூடிய நிலையில் அப்படியே விட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இந்த சாலை ஆங்காங்கு மண்ணை தோண்டி மூடிய பகுதிகளிலும், பாதாள சாக்கடை திட்டப்பணி முடிந்து சாலை அமைக்காததால் சாலை முழுமையும் புதை குழியாக மாறியுள்ளது.

இதனால் இந்த சாலை வழியாக வரும் வாகனங்களும் பள்ளத்தில் சிக்கி பல மணி நேரம் போராடி மீளும் அவலம் உள்ளது. அதேபோல் பாதசாரிகளும் நடந்து செல்லும்போது திடீரென சேற்றில் சிக்குவதுடன், அப்போது ஏற்படும் திடீர் பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது. தினமும் இவ்வாறு போராடுவதை தடுக்க இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: