×

இன்று காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் மண்டபத்தில் இருந்து மணமகன் தப்பி ஓட்டம்: திருப்போரூர் அருகே பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே இன்று காலை திருமணத்துக்கு முன்பு மண்டபத்தில் இருந்து திடீரென மணமகன் தப்பி ஓடிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மணமகனை தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் திவ்யா என்பவருக்கும், திருப்போரூர் அருகே குமிழி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உமாபதி மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் ஏற்கெனவே கடந்த மே 6ம் தேதி மாமண்டூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருப்போரூர் அருகே கொட்டமேடு கிராமத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இருவீட்டாரை சேர்ந்த ஏராளமான உறவினர்கள் திருமணத்துக்கு வருகை தந்தனர். இரவு 7 மணியளவில் திவ்யா-சதீஷ்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடலுக்கு மணமக்கள் இணைந்து நடனமாடியுள்ளனர். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மண்டபத்தில் இருந்த மணமகன் சதீஷ்குமாரை காணவில்லை என தகவல் பரவியது. இதனால் உறவினர்களிடையே பரபரப்பு நிலவியது. மணமகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதில் அதிர்ச்சியான மணமகள் வீட்டார், சதீஷ்குமாரின் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்கனவே ஒரு பெண்ணை மணமகன் சதீஷ்குமார் காதலித்து வந்ததாகவும், அதற்கு வீட்டில் சம்மதிக்காததால், வேறுவழியின்றி தற்போது நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும், காதலித்த பெண்ணை மறக்க முடியாததால், திருமணத்துக்கு முன்பே காதலியை கரம்பிடிக்க சதீஷ்குமார் மண்டபத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் நண்பர்கள் மூலம் பெண் வீட்டாருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து திருப்போரூர் போலீசில் மணமகளின் தந்தை திருநாவுக்கரசு புகார் அளித்தார். எஸ்ஐ நாராயணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மணமகள் தரப்பில் மணமகன் சதீஷ்குமாருக்கு கட்டில், பீரோ, பிரிட்ஜ், ஏ.சி, வாசிங் மெஷின், மோட்டார் பைக் உள்ளிட்ட பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாகவும், மாப்பிள்ளைக்கு 5 சவரன் செயின் போட்டதாகவும் தெரியவந்தது. மணமகனின் பெற்றோரிடம் விசாரித்ததில், தங்களது மகன் காதலித்த விவகாரம் தெரியாது.

தெரிந்திருந்தால் திருமண ஏற்பாடுகள் செய்திருக்க மாட்டோம் எனத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தலைமறைவான மணமகன் சதீஷ்குமாரை, அவரது செல்போன் சிக்னலை வைத்து, அவர் எங்கிருக்கிறார் என போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

Tags : Tiruporur , The groom ran away from the hall when the wedding was going to take place this morning: There was a stir near Tiruporur
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...