×

சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை நாளை துவக்கி வைக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை அமைச்சர் பெரியகருப்பன் நாளை துவக்கி வைக்கிறார். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளைத் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானதுக் கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து `SARAS’ எனப்படும் விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இக்கண்காட்சிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புறக் கைவினைஞர்கள் தயாரிக்கும் பழம்பெருமை வாய்ந்த கலைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள், புவிசார் குறியீடு பெற்ற தனித்துவம் வாய்ந்த பொருட்கள், இயற்கை வழியில் தயாரித்த பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கண்காட்சி செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, 06.09.2022 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  திரு. கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு, சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினைத் துவக்கி வைக்கவுள்ளார்.  தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா சிறப்பு மலரை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் வெளியிட்டு விழாப் பேருரை ஆற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர்  திருமதி பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Tags : Minister ,Periyakarappan ,Saras Mela and Navratri sales exhibition , Minister Periyakaruppan will inaugurate the Saras Mela and Navratri sales fair tomorrow
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...