×

ஆட்சி கவிழ்ப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். - காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக உள்ள ஹேமந்த் சோரன், பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு தானே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்ததாக தகவல் வெளியானது.

தேர்தல் ஆணைய பரிந்துரை மீது ஜார்க்கண்ட் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால் குழப்பமான சூழல் நீடிக்கிறது. இதனை பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக ஹேமந்த் சோரன் குற்றசாட்டினார். பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க ஜே.எம்.எம். - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சத்தீஸ்கர் அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ஒரு வார காலம் சத்தீஸ்கரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று ராஞ்சி அழைத்து செல்லப்பட்டனர்.

ஆட்சி கவிழ்ப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹேமந்த் சோரன் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரனின் ஜே.எம்.எம்.க்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 18 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 51 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் ஆட்சி நடத்தி வருகிறார். 26 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக, பிற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசுக்கு 48 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.


Tags : Chief Minister ,Hamant Soren ,Jharkhand , Jharkhand Assembly, Trust vote, Hemant Soren
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...