அரசியல் கட்சிகள் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி விளக்கம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி  விளக்கம் தர உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருகின்றன. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல கட்சிகள் மதத்தின் பெயரையும், அடையாளத்தையும் பயன்படுத்துகின்றன. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. மதத்தின் பெயரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முரளி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை இன்று விசாரித்தது.

அரசியல் கட்சிகள் மதத்தின் பெயர், சின்னங்களை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய விசாரணையின் போது தேர்தல் ஆணையம் இது தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

Related Stories: