குன்னுவாரன்கோட்டை கண்மாயில் வெளிநாட்டு பறவைகள் குவிகின்றன-சரணாலயமாக்க கோரிக்கை

வத்தலக்குண்டு : வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருகைதரும் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் உள்ள குன்னுவாரன்கோட்டை கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் வத்தலக்குண்டுவிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது குன்னுவாரன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாய் 68.50 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. கண்மாய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் இருந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பறவைகள் உணவு மற்றும் இனவிருத்திக்காக வருகின்றன. அவற்றுடன் உள்நாட்டு வலசை பறவைகளும் இந்த கண்மாயில் உள்ள மரங்களில் தங்கி இனவிருத்தி செய்கின்றன.

இந்த கண்மாயில் 109 வகையான பறவைகள் இருப்பதாக தகவல்கள் பதிவாகி உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படி ஒரே இடத்தில் இந்தளவு பறவைகளின் வகைகள் பதிவு செய்யப்படுவதுது இங்கு மட்டுமே. இதன்படி புள்ளி மூக்கு வாத்துகள், முக்குளிப்பான்கள், நத்தை கொத்தி நாரைகள், பெரிய, சிறிய, நடுத்தர நீர்க்காகங்கள் பாம்பு தாராக்கள், அன்றில்கள், நீலத்தாழைக்கோழிகள், சங்குவளை நாரைகள், கூழைக்கடாக்கள், உண்ணிக்கொக்குகள், குருட்டுக்கொக்குகள், சிறிய, நடுத்தர, பெரிய கொக்குகள் போன்ற நீர்ப்பறவைகள் இங்கு நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.

மேலும் காமன் பைபர், உட்சேண்ட் பைபர், கிரீன சேண்ட் பைபர், பார்ன்ஸ்வாலோ உள்பட 25 வகையான வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகின்றன. நீர்த்தேக்க பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் இந்த கண்மாயின் சிறப்பாகும். இந்த மரங்கள் நீர்ப்பறவைகள் இளைப்பாறவும், இனவிருத்தி செய்யவும் மிகவும் உதவுகின்றன. பறவைகள் வருகை இப்பகுதியில் பல்லுயிர்ச்சூழல் சம நிலை அடைய உதவியாக இருக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க கண்மாயின் முக்கியத்துவம் குறித்து அறியாமல், அங்கிருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. பறவைகள் சரணாலயத்திற்கான அத்தனை தகுதிகளும் உள்ள இந்த கண்மாயை பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறையினர் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர் சித்ரா கூறுகையில், ‘‘உலகளவில் அழிந்து வரும் பறவைகள் வகைகளில் ஐந்து இனங்கள் இந்த கண்மாயில் காணப்படுகின்றன. பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களுக்கே உள்ளது. ஏனெனில் மனித வாழ்க்கைக்கு பறவைகள் அவசியம். மீனாட்சிபுரம் பெரியகுளம் கண்மாயை உடனடியாக பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவித்து, இப்பகுதியில் மரங்கள் வெட்டுவதை தடை செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு குறைந்தது 3 குளங்களையாவது பறவைகளுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: