
நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள 400 ஏக்கர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பசுமைவெளி பூங்காக்களில் 32 ஏக்கர் நிலத்தில் 16,000 மரக்கன்றுகளை வளர்த்து பசுமைப்புரட்சிக்கு வித்திட்டுள்ளனர்.நிலக்கோட்டை அருகே சிறுமலை அடிவாரத்திற்கும் தேசிய நான்கு வழிச்சாலைக்கும் இடையே உள்ள பள்ளபட்டியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் சிப்காட் தொழில் வளாகம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் உலகலாவிய பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் முதல் சுமார் 45க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்பேட்டை 24 மணி நேரமும் இயங்கும் நிலையில் உள்ளூர், வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசின் கீழ் உள்ள சிப்காட் நிர்வாகத்தின் திட்ட மேலாளர் சுரீஜ்பாபு முயற்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ள தொழிற்சாலை வளாகத்தில் இந்த மழைக்காலத்தை பயன்படுத்தி தமிழக அரசின் ஒப்புதல் பெற்று வனத்துறை உதவியுடன் சுமார் 32 ஏக்கரில் 10 பசுமை மரப்பூங்காக்களை அமைத்துள்ளனர்.
இதில் மா, பலா, நாவல், வேம்பு, தேக்கு, புங்கன், புளி, நெல்லி, தோதகத்தி உள்ளிட பல்வேறு நிழல் மற்றும் பலன் தருவதுடன் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் 16 ஆயிரம் பசுமை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளுக்கு தினமும் நீரூற்றுதல், களை எடுத்தல், மண் அனைத்தல், பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இரு ஆண்கள் உள்பட 8 பேர் பணி அமர்த்தப்பட்டு தினமும் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்,மேலும் 400ஏக்கர் பரப்பளவு கொண்ட தொழில் வளாக கிளைச்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்களில் வரும் மழைநீர் அனைத்தும் ஒரே பகுதியில் வந்து தேங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பசுமை மரப்பூங்காக்களுக்கு பயன்படுத்தவும், சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 25 அடி ஆழத்தில் காங்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்ட நீர்த்தேக்க குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குளத்திற்கான நீர்வரத்து கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் குளத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கும். இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருப்பதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற உலகளாவிய பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் அவற்றின் பாதிப்புகளை சமன் செய்யும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெப்பம் மற்றும் காற்று மாசினை குறைத்து பசுமையான சூழலை ஏற்படுத்தவும் முன்னுரிமையுடனும், முனைப்புடன் செயல்பட்டு, வனத்துறையினர் உதவியோடு தமிழக அரசின் சிப்காட் நிறுவனமே களத்தில் இறங்கி இருக்கிறது.
இதன்படி சுமார் 400 ஏக்கர் பரப்பளவுள்ள தொழில் வளாகத்தில் 32 ஏக்கரில் வரும் மழைக்காலத்திற்கு முன்பே 16 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு 10 பசுமை பூங்காக்களை அமைத்து சிறப்பாக பராமரித்து பசுமைப் புரட்சிக்கே முன்மாதிரியாக திகழும் தமிழக அரசின் சிப்காட் நிர்வாகத்திற்கும், இந்த பணிகளை முனைப்புடன் செயல்படுத்திய நிர்வாக மேலாளர் சுரீஜ்பாபுவுக்கும் இப்பகுதி வன ஆர்வலர்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.