முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் சர்வதேச பிணந்தின்னி கழுகுகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி : இயற்கை  துப்புரவாளன் எனப்படும் வெண் முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம்  என இந்த நான்கு வகைகளில் ஆயிரக்கணக்கான பாறு எனப்படும் பிணந்தின்னி  கழுகுகள் தென்னிந்திய காடுகளில் காணப்பட்டன. கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு  விலங்கினங்கள் இறந்திருந்தாலும், அந்த சடலத்தை உண்டு செறித்து மற்ற  உயிர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் அசாத்திய திறன் கொண்டது.

கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் டைக்ளோ பினேக் எனப்படும் வலிநீக்கி  மருந்து, பிணந்தின்னி கழுகுகளுக்கு அழிவுக்கு காரணமாக அமைந்தது. இதனால்  தென்னிந்தியாவில் இந்த 4 வகை பிணந்தின்னி கழுகுகளும் வெறும் 300  மட்டுமே  இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் செந்தலை அல்லது  ராஜாளி எனப்படும் கழுகுகளின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் 15 மட்டுமே உள்ளன.  இவற்றின் கடைசிப் புகலிடமாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார்,  சிறியூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடகாவின் பந்திப்பூர்,கேரளவின் முத்தங்கா உள்ளிட்ட வனப்பகுதிகள் மட்டுமே உள்ளன.

இந்த  கழுகுகளை மீட்க அரசும், ஆய்வாளர்களும், தன்னார்வலர்களும் பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம்,  மசினகுடி வெளிமண்டலம் சார்பில் சர்வதேச பிணந்தின்னி (பாறு) கழுகுகள் தினம்  அனுசரிக்கப்பட்டது. மசினகுடி பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள்,  நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அருளகம்  தன்னார்வத் தொண்டு பிரதிநிதிகள் ஆகியோர் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட  ஜகலிக்கடவு பகுதிக்கு அழைத்து பாறு என்று அழைக்கப்படும் பிணந்தின்னி  கழுகுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

 பிணந்தின்னி கழுகுகள் கூடு வைப்பதற்கு தொடங்கும் பருவத்தை வரவேற்கும்  விதமாக பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்கு படம் வரைதல்  மற்றும் பரமபதம் விளையாட்டு மூலம் கழுகுகள் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக பிணந்தின்னி கழுகளைக் காக்க உறுதி மொழி  எடுக்கப்பட்டது. மருந்து விற்பனை சங்க பிரதிநிதிகள் பாறு கழுகுகளைக் காக்க  ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வனச்சரகர்கள்  பாலாஜி, ஜான் பீட்டர், வனவர்கள் சித்தராஜ், ஸ்ரீராம், வன காப்பாளர்கள்  ஆன்டனி எபினேசர், சிவக்குமார், அண்ணாதுரை, சுற்றுசூழல் ஆர்வலர்கள்  பாரதிதாசன், ரகுநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: