புதுக்கோட்டையில் இந்து கோயில் விழாவுக்கு சீர் வரிசை அளித்த இஸ்லாமியர்கள்: மத நல்லிணக்கத்திற்கு நன்னீர் பாய்ச்சும் கீரமங்கலம் மக்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கீரமங்கலத்தில் 500 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று இஸ்லாமிய மக்கள் சீர் வரிசை வழங்கிய நிகழ்வு காண்போரை பேருவகை கொள்ள வைத்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்துக்களின் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொண்டு செல்வதும், இஸ்லாமியர் பள்ளிகளுக்கு இந்துக்கள் சீர் வரிசை வழங்குவதும் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் கீரமங்கலத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான பட்டவையானார் கொம்புகார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா  நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு தாம்பூலம் தட்டுகளை ஏந்தியாவாறு குதிரைகள் அணிவகுப்போடும், வாணவேடிக்கையோடும் பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமிய மக்கள் நிறைந்த சீர்வரிசையுடன் கோயிலுக்கு சென்ற காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது. ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் வரிசையாக அணிவகுத்து கீரமங்கலம் பேருந்துநிலையம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். இதைப்போல் காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் கீரமங்கலம் காவல் நிலையத்திலிருந்து சீர் தட்டுகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

கோயிலுக்குள் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசையை பாரம்பரிய முறைப்படி வழங்கினர். கோயிலுக்குள் வந்த இஸ்லாமியர்களை வரிசையில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மலர் தட்டுகளோடு வரவேற்றனர். ஆண்கள் மாலை அணிவித்து இஸ்லாமியர்களை ஆரதழுவி வரவேற்ற காட்சி மதங்களை கடந்த மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அமைந்தது. இஸ்லாமிய மக்கள் தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசை தட்டில் பணக்கட்டுகளையும் கோயில் நிர்வாகத்திடம் மனமகிழ்ச்சியுடன் வழங்கினர்.  வழக்கம் போல் இந்துக்கள் பாசத்துடன் வரவேற்றது தங்களுக்கு மனமகிழ்ச்சியை உண்டாக்கியதாக இஸ்லாமிய மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: