மாணவர்களுக்கு கல்வியை விதைக்கும் கடினமான உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு உள்ளிட்டோர் வாழ்த்து..!!

டெல்லி: ஆசிரியர் தினம் நாடு முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி,

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்கத் தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் உருவாகுவதற்கு ஆசிரியர்களே காரணம் என்று பாராட்டியுள்ளார்.  

பிரதமர் நரேந்திர மோடி:

ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு கல்வியை விதைக்கும் கடினமான உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

ஆசிரியர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவச் செல்வங்களை ஒளிரும் நன்முத்துக்களாய் சமூகத்தில் விதைத்திடும் நற்செயல் புரிந்திடும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியப் பணியின் ஒளிவிளக்காய் திகழும் டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாளில், ஆசிரியர் தின வாழ்த்துகள். அன்பு- இரக்கம்- பகுத்தறிவுச் சிந்தனைக் கொண்ட ஒளிவிளக்குகளை ஏற்றிடுவோம் என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய வாழ்த்துச்செய்தியில், ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், மாணவச் செல்வங்களுக்கு கல்வியுடன், நற்குணம், ஒழுக்கம், சமத்துவம் கற்பித்து, அவர்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:

ஆசிரியர் தினத்தையொட்டி ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ஒழுக்கம், பண்பு, ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு, விளையாட்டு, உதவும் மனப்பான்மை என அனைத்தையும் மாணவர்களுக்கு போதித்து, அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

டிடிவி தினகரன்:

அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வகுப்பறையில்தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்று சொன்ன முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது மிக பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. ஏனெனில், ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெறும் எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமிடுவது ஆசிரியர்கள்தான். தன்னிடம் கற்றுக்கொண்டவர்கள் எவ்வளவு பெரிய உயரத்திற்கு போனாலும் அதை பார்த்து மகிழ்வதும் வாழ்வதும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உரிய தனி குணமாகும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மட்டுமின்றி வாழ்வின் எத்தனையோ அம்சங்களை நமக்கு கற்றுக்கொடுத்த ஒவ்வொருவரையும் இந்த ஆசிரியர் தினத்தில் நினைவில் நிறுத்தி வணங்கி, வாழ்த்தி மகிழ்ந்திடுவோம் என டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: