நிர்வாக பிரச்னைகளை சரி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி மண்டலங்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்கிறது; அதிகாரிகள் தகவல்

சென்னை: நிர்வாக பிரச்னைகளை சரி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கையை 23ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் 1688ம் ஆண்டு மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களையும், 200 வார்டுகளையும் கொண்டது. 2011க்கு முன்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும் முன், 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 சதுர கிலோ மீட்டராக உயர்ந்தது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தின் 7 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், 13 ஊராட்சி ஒன்றிய பகுதிகளும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 நகராட்சிகளும், 5 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் 12 கிராம ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியுடன்  இணைக்கப்பட்டன. விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 4.41 மில்லியன் வாக்காளர்களுடன், 15 மண்டலங்களும், 200 வார்டுகளையும் கொண்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளை 93 வார்டுகளிலும், பழைய சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளில் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் ஒரு சில மண்டலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வருவதால் நிர்வாக பிரச்னை ஏற்படுகிறது. அதன் காரணமாக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையில் மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் 2 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 15ல் இருந்து 23 மண்டலங்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. வடசென்னையில் 8 மண்டலங்களும், மத்திய சென்னையில் 8 மண்டலங்களும், தென் சென்னையில் 7 மண்டலங்களும் என மாற்றியமைக்கப்பட உள்ளன.

 

அதன்படி வடசென்னையில் 1 முதல் 8 மண்டலங்களும், மத்திய சென்னையில் 9 முதல் 16 மண்டலங்களும், தென் சென்னையில் 16 முதல் 23 மண்டலங்களும் என பிரிக்கப்பட உள்ளன். ஏற்கனவே திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இதில் புதிதாக கொளத்தூர், பெரம்பூர், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம்- மதுரவாயல், மயிலாப்பூர் -வேளச்சேரி, சோழிங்கநல்லூர் - ஆலந்தூர் ஆகிய மண்டலங்களை புதிதாக ஏற்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது புதிதாக மண்டலங்கள் வந்தால் அதற்கு அலுவலக கட்டிடம் தேவை. அதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புதிய மண்டலங்கள் விரைவில்  துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: