நண்பர்களுடன் குளித்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி மாணவன் பலி

பல்லாவரம்: குன்றத்தூர், நாலு ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஜெகதீசன் (17). கோவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று சுற்றி பார்த்துள்ளார். பின்னர், நண்பர்கள் அனைவரும் ஏரியில் குளித்தனர். நீச்சல் தெரியாத ஜெகதீசன் கரையில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது நண்பர்கள் ஜெகதீசனை ஏரிக்குள் இறங்கி குளிக்கும்படி வற்புறுத்தினர். நண்பர்கள் பேச்சைக் கேட்டு ஆழமான பகுதிக்கு சென்ற ஜெகதீசன், நீச்சல் தெரியாததால் அலறி கூச்சலிட்டபடி நீருக்குள் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெகதீசன் நீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிச்சியடைந்த நண்பர்கள், கரைப் பகுதிக்கு வந்து, உதவி கேட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குன்றத்தூர் போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, ஏரிக்குள் இறங்கி, சுமார் ஒரு மணி நேரம் தேடி, ஜெகதீசனை சடலமாக மீட்டனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: