உலக பாலியல் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம்; முன்னாள் நீதிபதி, மருத்துவர்கள், திரைப்பட பிரபலங்கள் பங்கேற்பு

அண்ணாநகர்: உலக பாலியல் தினத்தையொட்டி, வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  பாலியல் உரிமை குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ், கமிட்டி தலைவரும், அசோசியேட் செயலாளருமான டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், மாநில சட்ட கமிஷன் உறுப்பினருமான எஸ்.விமலா, திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், டாக்டர் டி.காமராஜ், டாக்டர் கே.எஸ்.ஜெயராணிகாமராஜ் ஆகியோர் கூறியதாவது: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துவருவது வேதனை அளிக்கிறது. பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்குமே மிக அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு தேவைப்படுகிறது.

இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். பாலியல் விஷயங்களையும், பாலியல் உணர்வுகளையும் மூடி வைப்பதால் பாலியல் வன்முறையாக உருவெடுக்கிறது. இந்த சமூக கொடுமையிலிருந்து மீள முறையான பாலியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் கடந்த சில  தினங்களுக்கு முன்பாக கேரள உயர்நீதிமன்றம், பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இதே போல் தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும். கொரோனா தாக்குதலால் உலக நாடுகள் அனைத்திலும் பாலியல் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பெண்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: