இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ மோதிய முதல் டெஸ்ட் டிரா

பெங்களூரு: இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) எத்தரப்புக்கும் வெற்றி, தொல்வியின்றி டிராவில் முடிந்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அபாரமாக விளையாடிய ஜோ கார்ட்டர் 197 ரன் விளாசினார். இந்தியா ஏ பந்துவீச்சில் முகேஷ் குமார் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 492 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 132 ரன் விளாசி ரிப்பன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ரஜத் பத்திதார் 170 ரன், திலக் வர்மா 82 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ரஜத் 176 ரன் (256 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் 121 ரன் (183 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 571 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது (143 ஓவர்). ஸ்ரீகர் பரத் 23 ரன், குல்தீப் யாதவ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 171 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி, 61 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்தது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது டெஸ்ட் (அதிகாரப்பூர்வமற்றது) ஹூப்ளி கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடிய மைதானத்தில் செப். 8ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: