தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும்.

சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுதவிர, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும்.

Related Stories: