காலத்தால் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காலத்தால் அழிக்க முடியாத கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே, உங்கள் யாவருக்கும், என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்வி தான். காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவும், பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி முழுமையாகத் தொடரவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை உறுதி செய்யவும், ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை அளித்து அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடியை ஒதுக்கியுள்ளது.

மேலும், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் நான் முதல்வன் என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 2025ம் ஆண்டிற்குள், 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறும் நோக்கோடு, 2021-22ம் ஆண்டில் “எண்ணும் எழுத்தும் இயக்கம்“ தொடங்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ அமையவுள்ளது. நாட்டின் எதிர்காலச் சொத்துக்களாம் இளைய தலைமுறையை, நன்முத்துக்களாக உருவாக்கும் பெரும் பொறுப்புக்குச் சொந்தக்காரர்களாகிய ஆசிரியப் பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்துப் போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க வாழ்த்துகள்.

Related Stories: