வ.உ.சி.யின் செயல்பாடுகள் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: நமது நாட்டு இளைஞர்களுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயல்பாடுகள் தொடர்ந்து ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கை: வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது வாழ்வை இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்து, மகத்தான தியாகங்களைச் செய்தவர். தற்சார்பு பெற்ற சுதந்திர இந்தியாவுக்காக அவர் பாடுபட்டவர். வணிகப் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமையை முறியடிக்க முதல் உள்நாட்டு நீராவிக் கப்பல் நிறுவனத்தை நிறுவினார். வங்காளத்தைப் பிரிப்பதன் மூலம் இந்தியச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் ஆங்கிலேயர்களின் கொள்கைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கத்தை அணிதிரட்டினார். அதற்காக, கடுமையான சிறைவாசம் அனுபவித்தார்.

வ.உ.சி. ஒரு புலமை வாய்ந்த அறிஞராகவும் இருந்தார். நமது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாக் காலத்தில் தற்சார்பு பாரதம் எனும் சுயச்சார்பின் மூலம் ஒரே பாரதம், உன்னத பாரதம் உருவாகிட நமது நாட்டு இளைஞர்களுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயலூக்கங்கள் தொடர்ந்து ஊக்கம் அளிப்பனவாக உள்ளன. இந்த மகத்தான தலைவருக்கு தேசம் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மதிமுக பொதுசெயலாளர் வைகோ: செக்கிழுத்த  செம்மல் வ.உ.சிதம்பரனார், நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடப்பது  பற்றியே அவரது சிந்தை முழுவதும் நிரம்பி இருந்தது. ஆங்கிலேய அரசால் வ.உ.சி.  மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.

அவரது கப்பல் நிறுவனம்  முடக்கப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் கொடுமையான  தண்டனையாக மாடுகளால் இழுக்கப்படும் செக்கு ஒன்றை தனி மனிதராக இழுக்க  வேண்டும் என்று கொடுமை படுத்தப்பட்டார். சிறை மீண்ட வ.உ.சி தமிழ் இலக்கிய  உலகத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். நீதிக்கட்சியின் சமூகநீதி கொள்கையை  ஆதரித்த வ.உ.சி தந்தை பெரியாரின் இலட்சிய தோழராகவும் விளங்கினார்.  வீரத்தமிழர் வ.உ.சி. புகழ் கொடி விண்முட்ட என்றும் பறக்கும். தியாகத்  தழும்புகளை பெற்ற வ.உ.சி போன்ற தலைவர்கள் போராடி பெற்ற விடுதலையை பாசிச  சக்திகள் சிதைப்பதை அனுமதிக்க கூடாது. வ.உ.சி யின் 151வது பிறந்த நாளில்  அதற்கான உறுதியை எடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: