சென்னையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: 21 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 ஆயிரம் சிலைகள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 3 ஆயிரம் சிலைகள் என 5 ஆயிரம் சிலைகள், நேற்று 17 வழித்தடங்களில் 21 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு போலீசார் அனுமதி அளித்த நான்கு கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த 31ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் கொண்டாடாமல் வீடுகளிலேயேயே சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் தமிழகம் மற்றும் சென்னையில் வழக்கத்தை விட இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சென்னை மாநகர காவல் எல்லையில் 1,352 சிலைகள், ஆவடி மாநகர காவல் எல்லையில் 503 சிலைகள், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 699 சிலைகள் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 1,962 சிலைகள் வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பாளர்களுக்கு போலீசார் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினர். அதன்படி கடந்த 31ம் தேதி போலீசார் அனுமதி அளித்த இடங்களில் 1,962 சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.பின்னர், வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னையில் காவல்துறை அனுமதி வழங்கிய 17 வழித்தடங்களில் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் கரைக்கப்பட்டது.

இதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க திருவல்லிக்கேணி உட்பட மாநகரில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். இதுதவிர 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். அதேபோல், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி 3,500 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி 3,300 போலீசார் மற்றும் 350 ஊர்க்காவல்படையினர் என சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் எல்லைகளில் மொத்தம் 21,800 போலீசார்  மற்றும் 2,650 ஊர்க்காவல் படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஊர்வலத்துக்காக பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்ட 17 வழித்தடங்கள் வழியாக ஆட்டம் பாட்டத்துடன் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இதேபோல், அடையாறு, திருவன்மியூர் பகுதிகளில் அமைக்கப்பட்ட சிலைகள் நீலங்கரை பல்கலை நகர் கடலிலும், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார் பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் காசிமேடு மீன்பிடிதுறைமுகம் கடலில் கரைக்கப்பட்டது. திருவல்லிக்கேணி வழியாக இந்து முன்னணி சார்பில் நடந்த சிலை ஊர்வலத்திற்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3 ஆயிரம் போலீஸ் மற்றும் அதிவிரைவுப்படையினர் பாதுகாப்புடன் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டது. இந்த சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் மணலி மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல, தாம்பரம் காவல் எல்லை,ஆவடி காவல் எல்லையில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 கடற்கரைகளில் நேற்று இரவு 8 மணி வரை சிலைகள் கரைக்கப்பட்டது. பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் சிலை கரைப்பு நிறுத்தப்பட்டது. சென்னையில் சிலைகள் கரைக்கப்படும் 4 கடற்கரை பகுதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் முலம் கண்காணித்தனர். சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல் எல்லைகளில் பொது இடத்தில் வைக்கப்பட்ட 1,962 சிலைகள் மற்றும் வீடு, கோயில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சுமார் 3,000க்கு மேற்பட்ட சிலைகள் என மொத்தம் 5,000 சிலைகளுக்கு மேல் நேற்று மாலை 8 மணி நிலவரப்படி போலீசார் ஒதுக்கிய நான்கு கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டது.

*அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் எந்த வித சிறு அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். விழா அமைப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், எந்த ஆண்டும் இல்லாத வகையில் ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை, புழல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதி, ஆர்.கே.நகர் காவல் எல்லையில் ‘சமத்துவ பிள்ளையர் பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் அப்பகுதிகளை சேர்ந்த பிற மதத்தினர்  கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும், போலீசாருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: