சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்: அசம்பாவிதங்களை தடுக்க 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, 15 ஆயிரம் போலீசாரும், 2 ஆயிரம் ஊர்  காவல்படை வீரர்களும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர சிலைகள் கரைக்கும் இடங்களில் மருத்துவக்குழு, தீயணைப்பு துறையினர், ஆழ்கடல்  நீச்சல் தெரிந்த 50 மீனவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் 31-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பலரும் விநாயகர் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது அருகம்புல் மாலை, கொலுக்கட்டை, பொங்கல், சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபாடு செய்தனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.தொடர்ந்து இவ்வாறு நிறுவப்பட்ட சிலைகளானது 3ம் நாள் 5ம் நாள் என நீர் நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்வது வழக்கம். ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் இதை கரைப்பார்கள். இதேபோல் சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 5 ஆயிரத்துக்கு  மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதில், 1,352  சிலைகள் பிரம்மாண்ட சிலைகளாகும்.

அதே போன்று ஆவடி போலீஸ் சரகத்தில் 503  சிலைகளும், தாம்பரம் போலீஸ் சரகத்தில் 699 சிலைகளும் வைக்கப்பட்டன. இந்த  நிலையில் பெரிய விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில்  கரைப்பதற்கான ஊர்வலம் இன்று நடந்தது. இதற்காக சென்னை பட்டினப்பாக்கம்  சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம்,  திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகள், ஏற்கனவே  தேர்வு செய்யப்பட்டு இருந்தது. பட்டினப்பாக்கத்தில் ‘டிராலி’ வசதி மூலம் விநாயகர் சிலைகளை தள்ளி  சென்று கடலில் கரைக்கப்பட்டது. இங்கு ஒரு இணை ஆணையர் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதுதவிர தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினர், (ஆம்புலன்ஸ்கள்) தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் படகில் எடுத்து  சென்று சிலைகள் கரைக்கப்பட்டது.

விநாயகர்  சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, சென்னை போலீஸ்  கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் 15 ஆயிரம் போலீசாரும், 2 ஆயிரம் ஊர்  காவல்படை வீரர்களும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சிலைகளை  கரைக்க வருபவர்கள் அலையில் சிக்கிவிட்டால் அவர்களைக் காப்பாற்றவும் ஆழ்கடல்  நீச்சல் தெரிந்த 50 மீனவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இது தவிர 22 கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள், சாதாரண உடையில் போலீஸ் ரோந்து என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊர்வலத்தில் வருபவர்களை கண்காணிக்க சென்னை அண்ணா சாலை (அண்ணா சிலை அருகே), மெரினா கண்ணகி சிலை அருகே என இரண்டு இடங்களில் திருவல்லிக்கேணி காவல் நிலையம் சார்பில் (கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்ட) பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் அதிக அளவு சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டதால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை முன்கூட்டியே கணித்த போலீசார், அதற்கு ஏற்றவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்தனர். அதன்படி நேற்றே பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய மாற்று வழி குறித்து அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதனை பின்பற்றி பொதுமக்கள் பயணித்தனர். அங்கு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: