சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியின் தரம் சிறந்து விளங்குகிறது; உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பாராட்டு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியின் தரம் சிறந்து விளக்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார். சார்பு நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, ராமசுப்ரமணியன், சுந்தரேஷ், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், காஷ்மீர் எனது பிறந்த பூமி, தமிழ்நாடு வாழ்ந்த பூமி என பெருமை படுத்தினார். உயர்ந்த வரலாற்றை உடையது சென்னை உயர்நீதிமன்றம் என்ற அவர், ஒன்று முன்னேறிச் செல்ல வேண்டும் அல்லது பின்னோக்கி செல்ல வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் பல வழிகளில் முன்னேறியிருந்தாலும், இட நெருக்கடியில் பின்னோக்கி இருந்தது. நீதிபதிகள் Software தான் உள்கட்டமைப்பு தான் Hardware இரண்டும் சரியாக இருந்தால் தான் வேலை சரியாக நடக்கும். நீதியின் தரம் சிறந்து விளங்கும் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம்.

அரசியலமைப்பின் படியே நாம் செயலாற்ற வேண்டும். உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு சரியான நேரத்தில் உதவி செய்துள்ளது. நீதிமன்றங்களில் எங்கெல்லாம் உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்ளனவோ, அங்கெல்லாம் அது சரிசெய்யப்பட வேண்டும். என் சக நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழை மேலும் உயர்த்துவார்கள் என்று நம்புகிறேன் என்றார். பின்னர் பேசிய நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை எப்போதும் எனக்கு 2-வது வீடு. என் 2-வது வீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததில் மகிழ்ச்சி. புதிய கட்டடம் கட்டப்படுவதும், பழையது புதுப்பிக்கப்படுவதும் பெருமைமிக்க தருணம். நீதியின் தரத்தை, நீதித்துறையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோம் என தெரிவித்தார்.

Related Stories: